நீலகிரி:சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையை அனுபவிக்க வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து சொல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின்( ரெட் டாக்ஸி, ஒலா, உபர்) வாகனங்கள் வந்து செல்வதால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று (திங்கள்கிழமை) மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறியதாவது, "அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் பயணித்துக் கொண்டு இருக்கும் ஆட்டோ ரிக்ஷாக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
நீலகிரி மாவட்ட வாகன ஓட்டுநர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu) சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்கள் 'பேக்கேஜ்' என்ற முறையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றன. இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகளை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்களை நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கக் கூடாது, அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்கள் ட்ராப் மட்டும்தான் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம்.
இதையும் படிங்க:'கிறிஸ்தவ சபைகளுக்கு அச்சுறுத்தல்'.. நீலகிரி ஆட்சியரிடம் கூட்டமைப்பு புகார் மனு!
அதே போல் இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போது அளித்து இருக்கக் கூடிய மனுவிற்கு 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசின் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப வழங்கப் போவதாக" தெரிவித்துள்ளனர்.