நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (மார்ச் 08) நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், எதிர்த் தரப்பு வழக்கறிஞர் விஜயன், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியோரும் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையின் தன்மையைக் குறித்துக் கேட்டறிந்த நீதிபதி கூடுதல் சாட்சிகள் இடையே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் தற்போதைய விசாரணைக்கான விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்திருந்த மனு குறித்து அரசு தரப்பில் பதில் கூறும் போது நீதிபதி வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.