சென்னை: கடந்த ஜூன் மாதம் ஒரு யூடியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்பு - உத் - தஹீர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து, விசாரணை செய்தனர். இதில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பவர் டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ் என்ற பெயரில் அந்த யூ-டியூப் சேனல் நடத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும், இந்த யூ-டியூப் சேனல் மூலம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும், ராயப்பேட்டை ஜானிஜான்க்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, இது தொடர்பாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஹமீது உசேன், அவர் சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை கைது செய்தனர். ஹமீது உசேன் கெளரவ பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு ஹிஸ்பு-உத்-தஹீர் இயக்க ஆதரவாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு தொடர்பாக, 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதில் முக்கியமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. பின்பு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், தேச விரோத செயலுக்குரிய சட்டப்பிரிவுகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்ததால் வழக்கின் விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.