மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் அப்பகுதியில் நடைபெற்று வந்த மத மாற்றத்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
இதனையடுத்து தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே வடகரை மில்லத்தூர் பகுதியில் வசிக்கும் தடைசெய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் நவாஸ்கான் மற்றும் குத்தாலம் அருகே தேரழந்தூர் பெருமாள் கோயில் சன்னதி தெருவில் வசிக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் (37) ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.