ஈரோடு:சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கமான ‘ஹட் ஹிஸ்புத் தஹ்ரீர்’ என்ற இயக்கத்திற்கு இளைஞர்களை திரட்டுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில், அவர்கள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தற்போது, சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு செல்போன்கள், சிம்கார்டு மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகள் சோதனை: ஈரோட்டில், ஜேசிஸ் பள்ளி அருகே அசோக்நகர் ஆறாவது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவரின் வீட்டிலும், ஈரோடு பெரியார் நகரில் சர்புதீனின் மகன் முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.