சென்னை:கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னை கர்நாடகா உள்ளிட்ட 18 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் எனவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை மூன்று நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முசாவீர் சாஹிப், அப்துல் மதீன் தாஹா, முஷாரின் ஷெரீப் ஆகிய மூவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்துல் மதீன் தாஹா என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருந்ததும் குண்டுவெடிப்பிற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்துல் மதீன் தாஹா என்பவரை 10 நாட்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவர் தங்கி இருந்த தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
மேலும், அப்துல் மதீன் தாஹா என்பவர் சென்னையில் தங்கி இருந்தபோது இரண்டு நபர்கள் அவருக்கு உதவிகள் செய்தது தெரியவந்ததை அடுத்து ராயப்பேட்டை பகுதி சேர்ந்த இருவர் இவருக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், இவர்கள் எதன் அடிப்படையில் அப்துலுக்கு உதவி செய்தார்கள், மற்றும் இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக இவர்களுக்குள் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்வதற்காக பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னையில் தங்கி இருந்த அப்துல் மதீன் தாஹாவிற்கு உதவிய இருவர் எங்கு பதுங்கி உள்ளார்கள்? என்ற விவரங்களை சேகரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போக்குவரத்து போலீசாரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி! - Cell Phone Flush In Chennai