சென்னை: ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடபுடையதாக கருதப்பட்ட நபர்களின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபர்கள் அப்துல் ரெஹ்மான் என்ற அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரெஹ்மான் என்ற முஜிபுர் ரஹ்மான் அல்தாம் சாஹிப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தாஹி அலி-டின் அல்-நபானியால் நிறுவப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவவும் மற்றும் அரசியலமைப்பை அமல்படுத்தவும் செயல்படும் ஒரு சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்கள் என என்ஐஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
என்ஐஏ நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் தீவிரவாத செயலுக்காக பல இளைஞர்களுக்கு ரகசியமாக பயிற்றுவித்து, அவர்களை இந்திய அரசியலமைப்பு இஸ்லாமியத்துக்கு எதிரானது என பயங்கரவாத தூண்டுதலுக்கு மாற்ற முயற்சித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.