கடலூர்:என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 லட்சம் வரையிலும், நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வழங்க இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ஒப்பந்த மற்றும் சொசைட்டி தொழிலாளர்களுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்க என்எல்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனை ஏற்க மறுத்த ஒப்பந்த தொழிலாளர்கள், 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி அறிந்த மாவட்ட நிர்வாகம், கடலூர் கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது.
ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நிர்வாகி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்படி, கடலூர் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில், அவரது அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணிசெல்வராஜ் மற்றும் தொழிலாளர்கள், என்.எல்.சி. சார்பில் பொது மேலாளர் திருக்குமரன், உதவி பொது மேலாளர் உமாமகேஸ்வரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை என்எல்சி நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சிறப்பு செயலாளர் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “என்எல்சி நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த, சொசைட்டி தொழிலாளர்கள் இந்த ஆண்டு தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2 நாட்களாக சுரங்க அலுவலகம் முன்பு சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தினர். இதனால் இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை, வேண்டுகோளை நிராகரித்துள்ளதால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இரு தரப்பினரும் பழைய நிலையிலேயே பாரமரிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்து இருக்கின்றது. ஆனால், சட்டத்திற்கு விரோதமாக என்.எல்.சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜீவா தொழிற்சங்க அமைப்பு தலைவர் அந்தோனி போராட்டத்தில் ஈடுபடுகிறார், தொழிலாளர்களைத் தூண்டுகிறார் எனக் கூறி, வாய்மொழி மூலமாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர். இவை அனைத்தும் நீதிமன்ற உத்தரவிற்கு மீறிய செயலாகும் என்றார். மேலும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று மாலை போராட்டக் குழுவினரிடம் கலந்து பேசி அறிவிப்போம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:8 ஆண்டுகளாக விடுப்பா? தொடக்க கல்வித் துறையில் ஒரே வாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட்!