சென்னை:தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்பி)இடமாற்றம் செய்து, தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தின் 65வது காவல் கண்காணிப்பாளராக என்.எஸ்.நிஷா இன்று உதகையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீலகிரி மாவட்டமானது, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டம் என்பதால், கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதேபோல், மனித-வனவிலங்கு மோதல் அதிகம் ஏற்படும் மாவட்டமாக உள்ளதால், அதனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீலகிரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லையில் அமைந்துள்ளதால், இங்கு உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலாஜி சரவணன் கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், தூத்துக்குடியின் புதிய எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் மாற்றம் செய்யப்பட்டார். இன்று பதவியேற்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “சமூகம் சார்ந்த பிரச்சினை மற்றும் சாதி ரீதியான பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும். போதைப் பழக்கம் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும். தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. இவை கட்டுக்குள் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.
அதேபோல், கோவை மாவட்டத்தின் 43வது காவல் கண்காணிப்பாளராக, முன்னதாக திருவண்ணாமலை எஸ்.பியாக பணியாற்றிய கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், “கோவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். போதைப் பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். போதைப் பொருள் விவகாரத்தில் முக்கிய கவனம் எடுத்து கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தலின் விளைவு குறித்தான விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர். இந்நிலையில், இன்று ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருப்பத்தூரின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளராகவும் ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இவர், “திருப்பத்தூரில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நானும் ஒரு பெண் என்பதால் தயவு காட்ட மாட்டேன். குற்றச் சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன்” எனக் கூறினார்.