சென்னை: தமிழ்நாட்டில் வாட்ஸ் அப் செயலி மூலமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க புதிய வசதி ஏற்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்த குமரகுருபரன், "மாணவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தகவல்கள் அனுப்புவதில் மிகப்பெரிய சிரமங்கள் உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையானது, மாணவர்களின் அலைபேசி எண்கள் கிட்டத்தட்ட 1 கோடியே 16 லட்சம் எண்கள் ஏற்கனவே வைத்திருக்கிறது. இந்த நிலையில், பல பெற்றோருடைய அலைபேசி எண்கள் தவறானதாகவும், சில எண்கள் உபயோகத்தில் இல்லாதவைகளாவும் உள்ளன. இதனால் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதற்கு, அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பயனற்றுப் போகிறது. எனவே, இந்த நிலையைச் சரி செய்யும் நோக்கில் ஒரு புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Whatsapp Notification (Photo Credit to ETV Bharat Tamil Nadu) மாணவர்களின் பெற்றோர் எங்களுக்கு ஒரு OTP அனுப்புவதன் மூலம், அவர்களின் அலைபேசி எண்களைச் சரி பார்க்கின்றனர். இந்த திட்டத்தை ஆரம்பித்த சில நாட்களிலேயே 5 லட்சத்திற்கும் மேல் எண்கள் சரி பார்க்கவும், உள்ளீடு செய்யப்பட்டும் இருக்கிறது. திருவாரூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள், அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்களை திட்டத்தைத் தொடங்கிய 3 நாட்களிலேயே திரட்டியுள்ளனர்.
இந்த திட்டமானது தற்போது 10 சதவீதம் முடிவடைந்துள்ளது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த தளத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அலைபேசி எண்ணோ அல்லது பெற்றோரின் அலைபேசி எண்ணோ அல்லது அவரது பாதுகாவலரின் எண்ணோ உள்ளீடு செய்யப்படும்.
இந்த திட்டத்தின் வாயிலாக பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எளிதில் தகவல் அனுப்ப உதவியாக இருக்கும். வாட்ஸ் அப் கேட் வே உடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணைத்துக் கையெழுத்திட்டு, இந்த புதிய முயற்சியைச் செய்து வருகிறது. இந்த முயற்சியின் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் அனைத்திற்கும் விரைவாக தகவல் அனுப்ப முடியும்.
தற்போது மாநில அதிகாரிகளான அறிவொளி, பழனிச்சாமி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் இந்த தளத்தைக் கையாளுகின்றனர். இந்த திட்டத்தின் அடுத்தகட்ட திட்டமானது மாவட்ட அதிகாரிகளையும் கையாள வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் எளிதில் தகவல்கள் அனுப்புவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1.68 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன" - தமிழ்நாடு அரசு தகவல்! - TN Urban Habitat Development Board