தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லாயல் மில் காலனி எம்.ஜி.ஆர் திடலில், மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்திற்கு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் செண்பகமூர்த்தி தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், செல்வகுமார், வண்டானம் கருப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கடம்பூர் ராஜு மேடை பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது அவர் பேசியதாவது, “பேசுகின்ற மொழியிலேயே ஒரு மாநிலத்தின் பெயர் இருக்கின்றது என்றால், அது தமிழ்நாடுதான், இதற்கு வித்திட்டவர் அண்ணா. அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்காக வித்திட்டவரே எம்ஜிஆர் தான். வாரிசு அரசியல் என்பது திமுகவில் வாடிக்கையாகிவிட்டது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், திமுகவில் எவ்வளவு மூத்த அமைச்சர்கள் உள்ளார்கள், அவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய அவர், 2026 தேர்தல் திமுகவிற்கு முடிவு கட்டும் தேர்தலாக அமையும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதிதாகக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் கொடியை அமைப்பதில் சிக்கலும், வேதனையும் படுகின்றார்கள். நானும் 5 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். ஆனால், தற்போது ஒரு ஏக்கருக்கு டிடிசிபி அப்ரூவல் வாங்க வேண்டும் என்றால் கூட திமுக அமைச்சருக்கு கப்பம் கட்ட வேண்டும் என குற்றம்சாட்டினார்.
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற உடன் முதலமைச்சர் ஸ்டாலின் போட மறந்த நீட் தேர்வு ஒழிப்பு கையெழுத்து போட்டுவிடுவாரா என கேள்வி எழுப்பிய அவர், ஒற்றை செங்கலை வைத்து ஊரை ஏமாற்றி வருகிறார்கள் என்றார். மேலும், அதிமுக எப்போது வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரும். அதிமுகவை அழித்து விடலாம் என்ற எண்ணத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு வழக்குப் போடுகிறார்கள். ஆனால், இதற்கு எல்லாம் அதிமுக அஞ்சாது, சட்டரீதியாக எதையும் எதிர்கொள்வோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக ஓபிஎஸ் அறிக்கை.. அதிமுக ஒன்றிணைப்பில் திருப்புமுனை!