சேலம்:மாமாங்கம் பகுதியில் உள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சேலம் புதிய பேருந்து நிலையம், கொண்டலாம்பட்டி, ஆத்தூர், சென்னை, ஓமலூர், மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கும், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உயர் ரக தனியார் நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், சொகுசு கார் விற்பனை நிலையங்கள் என வணிகம் அதிகம் நடக்கக்கூடிய முக்கிய இடமாகவும் இந்த மாமாங்கம் பகுதி திகழ்ந்து வருகிறது.
இதேபோல, ரெட்டிபட்டியில் இருந்து ஜங்ஷன், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், சேலம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் மையமாகவும் மாமாங்கம் உள்ளது. மேலும், அனைவருக்கும் இணைப்பு சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் எப்போதும் மாமாங்கம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே காணப்படும்.
மேலும், கோயமுத்தூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும் வடமாநிலங்களுக்கு வாகனங்கள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையாகவும் இந்த சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், வெளி மாநில கனரக வாகனங்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் கடக்கும் பகுதியாக மாமாங்கம் உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், வாகனங்கள் வேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படும் பகுதியாகவும் மாறிவிட்டது எனலாம். அதனால், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.