சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கு மே 27ஆம் தேதி வரையும், முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பில் சேர்வதற்கு மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையும் https://www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 492 இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளான மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மீன்வள தொழில்நுட்பம், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசுக் கல்லூரியில் உள்ள இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 17,790 இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 62 ஆயிரத்து 341 இடங்களுக்கு கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், 2024 - 2025 ம் கல்வியாண்டிற்கான, நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு, பகுதி நேரப் பட்டயப்படிப்பிற்கு https://www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் (TNEA Facilitation Centre) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களின் பட்டியல் https://www.tnpoly.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.