செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் ஏரியில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை தினந்தோறும் மேய்த்து வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் விவசாயிகள் அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போத, அருகே இருந்த முட்புதருக்குள் குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது.
அதைக் கேட்ட நபர்கள் அருகில் ஏதோ குழந்தை அழுவது போன்று சத்தம் கேட்கிறது என அந்த முட்புதரில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, கட்டப்பை ஒன்றில் இருந்து குழந்தையின் அலறல் சத்தம் வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த கட்டப்பையை எடுத்துப் பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. பச்சிளங் குழந்தை ரத்தக்கரையுடன் இருந்ததால், ஆங்காங்கே எறும்புகள் கடித்து உடல் சிவந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர்கள் உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பச்சிளம் குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.