திருவாரூர்:நீடாமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், மைசூர் விரைவு ரயில், அதேபோன்று காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், 20 சரக்கு ரயில் என நாள்தோறும் சுமார் 42 ரயில்கள் செல்கின்றன. இதன் காரணமாக நீடாமங்கலம் ரயில்வேகேட் நாள் ஒன்றுக்கு 42 முறை மூடப்படுகிறது. அதனால் 8 மணி நேரத்திற்கு மேலாக இந்த ரயில்வே கேட்டில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
மேலும் இந்த ரயில்வே கேட் வழியாக நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பகோணம் மற்றும் அதன் வழியாக சென்னைக்கும் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி இங்கு சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வரும்போதும், இங்கிருந்து பிற இடங்களுக்கு நெல் மூட்டைகள் ஏற்றும் போதும், சரக்கு ரயிலின் வேகன்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டு பணிகள் முடிந்த பிறகு வேகன்கள் இணைக்கப்பட்ட ரயில் புறப்படும், அதுவரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால் நீடாமங்கலம் பகுதி மக்கள் மட்டுமன்றி, இந்த ஊரை கடந்து செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்ட ரூ.170 கோடியில் திட்டம் அறிவித்து, பழைய நீடாமங்கலம், பரப்பனாமேடு, சித்தமல்லி ஆகிய கிராமங்களில் சுமார் 2.60 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடாக ரூ.36 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.