திண்டுக்கல்:கொடைரோடு அருகே, திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் உள்ள ஜல்லிபட்டி பிரிவில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்திற்கிடமாக சாலையோரம் நின்றிருந்த ஒரு கும்பலை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது காரில் இருந்த 6 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது, அதில் 100 ரூபாய் கள்ளநோட்டு 26 ஆயிரத்து 500 இருந்துள்ளது. மேலும், கள்ளநோட்டு தயாரிக்கப் பயன்படும் இயந்திரமும் இருந்ததுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ளும் போதே, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி (31) என்பவர் தப்பி ஓடி விட்டார்.
5 பேர் கைது:இதனையடுத்து, காரில் இருந்த மற்ற 5 பேரை கைது செய்த போலீசார், காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் விருதுநகர் மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்த பெரியசாமி என்ற அழகர் (28), மதுரை கூடல் நகர் புதூரைச் சேர்ந்த சுசித்ராஜ் (30), மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த வீரமணி (26) மற்றும் ஜெனித்தா (24), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரவி (64) என்பது தெரியவந்துள்ளது.
ஆங்காங்கே கள்ள நோட்டு தயாரித்த இவர்கள் திருச்செங்கோட்டில் கள்ள நோட்டு தயாரித்து விட்டு விருதுநகருக்குச் செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கினர். மேலும், கள்ள நோட்டு அச்சடிப்பதற்காக விருதுநகரைச் சேர்ந்த திருப்பதி என்பவர் மூளையாகச் செயல்பட்டார் என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தப்பியோட்டம்:இதனையடுத்,து விருதுநகர் விரைந்த தயாநிதி தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பதியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்ட திருப்பதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறப்புக் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார், திருப்பதியை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற போது, போலீசாரை தள்ளிவிட்டு மருத்துமனையில் இருந்து திருப்பதி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் இருவர் அடுத்தடுத்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:விசிட்டிங் கார்டு மூலம் கொக்கி.. வடமாநிலத்தவரே குறி.. திருப்பத்தூர் கும்பல் கேரளாவில் சிக்கியது எப்படி?