தருமபுரி:கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அதிக அளவிலான பழங்கால கல்வெட்டுக்கள் மற்றும் கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கலை, பண்பாடு, வரலாறு மற்றும் தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ள பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கி வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில், மாணவர்களுக்கு பழமையான கல்வெட்டுகள், நாணயங்கள், பானை ஓடுகள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பழைய, புதிய கற்கருவிகள் குறித்து மன்றச் செயலரும், பட்டதாரி தமிழாசிரியருமான ஜெயலட்சுமி பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில், காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அருண், சந்துரு ஆகியோர் காமன்தொட்டி அருகிலுள்ள தின்னூரிலும், கோபசந்திரத்திலும் செவ்வக வடிவிலான இரு பெருங்கற்கால கல்திட்டைகளை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, அந்த 2 கல்திட்டைகளையும் மாணவர்களும், ஆசிரியரும் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
பின்னர், இது குறித்து ஆசிரியர் ஜெயலட்சுமி கூறுகையில், “இறந்தவர்களுக்கு பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இது பெருங்கற்காலம் எனப்படுகிறது. ஈமச்சின்னத்தின் மேற்பகுதியில் பலகை கற்களால் நாற்புறங்களிலும் சுவர் போல் அமைத்து, அதன்மேல் கற்பலகையைக் கொண்டு மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும்.