குழந்தைக்கு என்ன நோய் எனத் தெரியாமல் தவிக்கும் பெற்றோர் தேனி: பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜக்கையன்-மணிமேகலை தம்பதிக்கு மூன்று பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள தோட்டங்களில் பூச்சி மருந்து அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜக்கையன், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் தான் குடும்பச் செலவுகளை போக்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜக்கையனின் இரண்டாவது மகளான மதுபாலாவிற்கு வலிப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கூறியுள்ளனர்.
அதன் பின்னர் உடல்நிலை சரியான பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதாகச் சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், சிறுமியின் உடல் நிலையில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர், மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது, திடீரென சிறுமி மதுபாலா மயக்கம் அடைந்து, சுயநினைவு இழந்ததால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆறு மாதம் சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சிறுமியின் உடல் நிலையில் முன்னேறி வந்தாலும், அவ்வப்போது உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், தற்போது சிறுமியின் உடலில் திடீரென தடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிறுமியின் தந்தை ஜக்கையன் கூறும் போது, “எனது இரண்டாவது மகளுக்கு, அவளுடைய 4 வயதில் வலிப்பு ஏற்பட்டது. அப்போது, அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். பின்னர், உடல் நிலை சரியான பிறகு வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம்.
ஆனால், சிறுமி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டாள். சிலர் அவளை மந்திரிக்க அழைத்து செல்லுமாறு கூறினர். அதற்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். அதுவும் எந்த பயனும் அளிக்கவில்லை. பின்னர், தேனியில் உள்ள பிரபல நரம்பியல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றோம்.
ஏராளமான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அப்போது, குழந்தை திடீரென சுயநினைவு இல்லாமல் போனது. உடனே தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆறு மாதங்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள். அவளுக்கு குழாய் மூலம் தான் உணவு ஆகாரங்கள் வழங்கப்பட்டன.
என்ன நோய் என்பதைக் கண்டறிய சிறுமியின் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 7 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஊசியை வாரம் ஒரு முறை என பத்து முறை ஊசி போட்டனர். அதன் பின்னர், உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
ஆனால், அவளுக்கு ஏற்பட்ட நோய் என்ன என்பதை மருத்துவர்கள் இதுவரை தெளிவாகக் கூறவில்லை. தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்ததால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த குழந்தையையே கவனித்து வருவதால் மற்ற குழந்தைகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை" என வேதனையுடன் தெரிவித்தார்.
சிறுமியின் தாயார் மணிமேகலை கூறுகையில், "கடந்த ஆண்டில் மட்டும் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில், நெஞ்சில் சளி உறைந்துள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர், வயிற்று வலிக்கு அனுமதிக்கப்பட்டு, வால் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மீண்டும் நெஞ்சில் சளி உறைந்துள்ளதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். இதைப்போல், தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறாள். அவளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன என்பதை யாரும் தெளிவாகக் கூறவில்லை. மேலும், இதனால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். வாங்கிய கடனையும் கட்டமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனக் கூறினார்.
கடந்த 6 வருடங்களாக, தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் தங்களுடைய குழந்தைக்கு ஏற்பட்டுள்ள நோய் என்னவென்று கூட தெரியாமல் சிறுமியின் பெற்றோர் தவித்து வருகின்றனர். மிகுந்த பொருளாதார நெருக்கடியால், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த குடும்பம் தற்போது தமிழக அரசின் உதவி கரம் கேட்டு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் இருக்கிறார்.. பழனி கோயில் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு!