சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தலைமறைவாக உள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், அடிக்கடி கென்யா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதைப் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, கடந்த மாதம் 17ஆம் தேதிக்கு முன்பாக ஜாபர் சாதிக், கென்யாவிற்கு சென்று வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த தேதியில் ஜாபர் சாதிக்கு உடன் கென்யா சென்ற நபர்கள் யார்? என்பன குறித்த விவரங்களை சேகரித்து, அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வீட்டு சுவரில் நோட்டீஸ்; ஜாபர் சாதிக்கின் தாயார் ஃபோட்டோ எடுத்து அனுப்பினாரா? போலீசார் தீவிர விசாரணை!
கென்யா நாட்டிற்கு போதைப் பொருள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக சென்றார்களா? என்ற கோணத்திலும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுமார் 10 முறை ஜாபர் சாதிக் கென்யா பயணம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜாபர் சாதிக்குடன் ஒவ்வொரு முறை கென்யா சென்றவர்கள் குறித்த பட்டியலை தயாரித்து, கென்யா நாட்டில் யாரையெல்லாம் சந்தித்தார்கள் என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் டெல்லியில் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களைத் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறிக் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து போதைப் பொருட்களைக் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!