தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாணவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" - நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர் கோபிநாத்! - National Teachers Award 2024

National Teachers Award 2024: "தேசிய அளவில் பெறப்படும் நல்லாசிரியர் விருதினை என்னுடைய மாணவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்" என ஆசிரியர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் கோபிநாத்
தேசிய நல்லாசிரியர் விருதாளர் ஆசிரியர் கோபிநாத் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 2:36 PM IST

Updated : Aug 28, 2024, 4:09 PM IST

வேலூர்:முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் கோபிநாத் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்தவகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து, ஜூன் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதிலிருந்து 50 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முரளிதரன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

இவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்க உள்ளார். விருதாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர் கோபிநாத் யார் என்பது குறித்து பார்ப்போம்.

யார் இந்த ஆசிரியர் கோபிநாத்?:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ராஜா குப்பம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கோபிநாத். 19 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், குப்பம் பள்ளியில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.

மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காக, விளையாட்டு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மூலம் பாடம் கற்பித்து வருகிறார். குறிப்பாகப் பள்ளி மாணவர்களை போல இவரும் சீருடை அணிந்து வந்து மாணவர்களுக்கு பாடம் எடுப்பது அனைவரது மத்தியிலும் கவனம் பெற்றது.

ஆசிரியர் பணியே அறப்பணி:இது குறித்து நமது செய்தியாளரிடம் ஆசிரியர் கோபிநாத் கூறுகையில், "வகுப்பறையில் ஒரு ஆசிரியராக மட்டும் அல்லாமல், மாணவர்களுடன் ஒன்றாக சேர்ந்து உண்பதையும், அவர்களைப் போலவே சீருடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து உள்ளேன்.

இளம் வயதில் மாணவர்களில் கல்வித்திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, ஓவியம், நடனம், மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலைகள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்து வருகிறேன். என்னுடைய சேவையைப் பாராட்டி தேசிய அளவில் நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆகியோருக்கு நன்றி. இந்த விருதை என்னுடைய மாணவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து முதல் மருத்துவர்; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்!

Last Updated : Aug 28, 2024, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details