சென்னை: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில், களப்பணியாளர்கள் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பொறியியல் இயக்குநர் மி.ஜெய்கர் ஜேசுதாஸ், பொது மேலாளர் இரா.இராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர் ஆர்.சிவமுருகன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன், "இந்த கூட்டத்தில் முக்கியமான கோரிக்கையைத் தொழிலாளர்கள் வைத்திருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் 2002-ல் வேலைக்கு சேர்ந்த போது அவர்களை நிரந்தரம் செய்யவில்லை. 2009க்கு பிறகு தான் கான்ட்ராக்ட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. 2002-ல் வேலைக்கு சேர்ந்தவர்களையும் நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களது கோரிக்கை நியாயமான கோரிக்கை, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இதில் கவனம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் வேலை செய்யும் போது நோய் தாக்குமா என்று தெரியாது. ஆனால், இவர்கள் நோய் தாக்கக்கூடிய இடத்தில் வேலை செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிஎஃப் தொகை எடுக்கிறார்களா? இல்லையா?, ஈஎஸ்ஐ எடுக்கிறார்களா என்பதும் தெரியவில்லை, பல நபர்களுக்கு இன்சூரன்ஸ் கூட இல்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. நிரந்தர பணியாளர்களுக்கு 90% பிரச்சனை இல்லாமல் உள்ளது. கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் டைரக்ட் பேமெண்ட் சிஸ்டம் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும்.
தேசிய ஆணையம் உள்ள நிலையில் நாங்கள் மாநில ஆணையம் வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஏற்கனவே 7 மாநிலங்களில் இது இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதுபோன்ற ஆணையத்தைக் கேட்கின்றோம். தூய்மை பணியாளர்கள் அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்ய ஏதுவாக கர்நாடகாவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு அதற்கு ஏராளமாக நிதி வழங்கி வருகிறது. 50 லட்சம் ரூபாய் வரை, குறைந்த வட்டியில் இந்த உதவி செய்யப்படுகிறது. 5 தூய்மை பணியாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட இதைப் பெற முடியும்.