நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸில் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜார்ஜ் ஹாரிசன் தேவாலயம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் தேசிய தியாகிகள் தினத்தை முன்னிட்டு போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
இந்நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தியாகிகள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தின் தலைவர் கமாண்டன்ட் கிருஷ்ணேந்து தாஸ் பங்கேற்று மலர் வளையம் வைத்து உரையாற்றினார்.
போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி (ETV Bharat Tamil Nadu) அப்போது, பேசிய அவர், “ராணுவத்தின் உயர்ந்த மரபுகளின் அடிப்படையில் நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் நாம் அனைவரின் நினைவிலும் எப்போதும் இருப்பார்கள். தியாகிகளை நினைவுகூரும் வேளையில் அவர்களது போராட்டம் மிகுந்த மதிப்புக்குரியது என்பதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது, மறுக்கமுடியாததும் கூட.
தியாகிகள் விட்டுச் சென்ற பணியை முடிப்பது தான் நமது கடமை. தியாகிகளின் தியாகங்களைப் பற்றி அனைவரும் சிந்திக்கவும் வேண்டும். போரில் உயிர்நீத்தவர்களின் தைரியம் மற்றும் தேச பக்தியை நாம் இன்றைய தலைமுறையிடம் எடுத்துக் கூற வேண்டும். தியாகம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது. உண்மையான தேசபக்தி என்பது வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல் செயல்கள் என்பதை நிரூபித்தவர்கள் அவர்கள்.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அனல் பறக்கும் பரப்புரை ஓய்ந்தது; 5 ஆம் தேதி வாக்குப்பதிவு!
கடமைகளைச் செய்யும் போது தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த குடும்பங்களையும் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறினார். தொடர்ந்து பாதிரியார் விஜேஷ் தலைமையில் ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, எம்ஆர்பி பேண்ட் இசைக் குழுவினரின் தேச பக்தி பாடல்கள் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேவாலய செயலாளர் பிராங்க், பொருளாளர் தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ராணுவத்துறையினர் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.