தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை; தஞ்சையில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்!

தமிழகத்தில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் (Cyclone Fengal) காரணமாக தஞ்சையில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் கோவி.செழியன், நீரில் மூழ்கிய நெற்பயிகள்
அமைச்சர் கோவி.செழியன், நீரில் மூழ்கிய நெற்பயிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

தஞ்சாவூர்:தமிழகத்தில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் (Cyclone Fengal) காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு மிதமாக பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று, காலை நிலவரப்படி கும்பகோணம் வட்டத்தில் 45.60 மி.மீ, பாபநாசம் வட்டத்தில் 63.50 மி.மீ, திருவிடைமருதூர் வட்டத்தில் 60.03 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மதுக்கூரில் 86.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 80.50 மி.மீ, அய்யம்பேட்டையில் 80 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக தஞ்சை மாவட்டத்தில் 56.43 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்:புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் தஞ்சைக்கு வந்துள்ளனர். 60 பேர் கொண்ட இந்த இரண்டு குழுவினர் ஸ்டச்சர், படகு, கயிறு, மரம் அறுக்கும் எந்திரம், நீரில் மூழ்கி இருப்பவர்களை மீட்க ஆக்ஸிஜன் சிலிண்டர், ஜெனரெட்டர், பாதுகாப்பு கவசம், சோலார், உள்ளிட்ட பொருட்களுடன் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர்.

பாதுகாப்பு உபகரங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் (ETV Bharat Tamil Nadu)

நீரில் மூழ்கிய நெற்பயிகள்:இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகிய அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:6 மணிநேரமாவா! ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், ஆயத்தப்பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரவிந்த், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீரில் மூழ்கிய நெற்பயிகள் (ETV Bharat Tamil Nadu)

இக்கூட்டத்தில், மழைக்காலத்தில் மழைநீர் சாலைகளில் தேங்காத வண்ணம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வயல்களில் புகுந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வாய்க்கால்கள், நீர்வழித்தடங்களில் அடைப்பு, உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை, மின் கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அமைச்சர் கோவி.செழியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது, “தஞ்சை மாவட்டத்தில் மழையால் சுமார் 8 கிராமங்களில், 270 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ, பி பிரிவு வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்பட்டும், சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் ஆகாயத்தாமரைகள் நிரம்பி இருக்கின்ற காரணத்தினால் தூர்வாரப்படவில்லை.

அவைகளை துரித நடவடிக்கையில் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் எங்கெல்லாம் தூர்வாரப்பட வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டுள்ளது. அவற்றையும் வருங்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details