திருநெல்வேலி:நெல்லையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பொருளாதார தேவைக்காக தற்காலிகமாக மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், திண்டுக்கல், அறந்தாங்கி, அருப்புக்கோட்டை, திண்டிவனம், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
ஒன்றிணைக்கும் திருவிழா: இவ்வாறு இந்த இடத்தை விட்டுச் சென்றவர்கள், அங்கு நடக்கும் அட்டகாளியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஒன்று கூடுவது வழக்கம். எனவே, 20 நாட்களுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நரிக்குறவர்கள் வரத்தொடங்கினர். இதனால் எம்.ஜி.ஆர் காலனியில் நரிக்குறவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருவிழா நடைபெற உள்ளதால், அம்மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஆரவாரத்துடன் தொடங்கிய திருவிழா:விழாவின் தொடக்க நிகழ்வாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) பெருமாள் சாமிக்கு ஆண்கள் மட்டும் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் மண்பானையில் பொங்கலிட்டும், வெள்ளாடுகளை பலி கொடுத்தும் வயிறார உண்டு மகிழ்ந்தனர். பலி கொடுத்த எருமை மற்றும் வெள்ளாடுகளுக்கு தீபாராதனை நடத்திய பின்னர், அவற்றை அறுத்து சாமிக்கு படையல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாவிளக்கு ஏற்றி மைதா, ரவை, சீனி போன்றவற்றின் கலவையில் ரொட்டி சுட்டு படையலிட்டனர்.
பலியிட்டு சாமி வழிபாடு: இந்நிலையில், இன்று காலை மதுரை மீனாட்சி மற்றும் கருப்பசாமிக்கு வெள்ளாடுகளையும், அட்டகாளியம்மனுக்கு எருமை கடாக்களையும் பலி கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும், பலி கொடுத்த விலங்குகளின் ரத்தத்தை கோயில் முன்பாக தோண்டப்பட்டிருந்த குழியில் சேகரித்தனர். பின், அதில் சாமியின் திருவுருவத்தை வைத்து அபிஷேகம் செய்தனர்.
பின் அபிஷேகம் செய்யப்பட்ட ரத்தத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டனர். அப்போது, சிறுவர்கள் உள்பட பலர் இடுப்பில் சலங்கை மற்றும் பாவாடை கட்டிக்கொண்டு ஆக்ரோஷமுடன் சாமியாடினர். இறுதியாக பலி கொடுத்த எருமைக்கடா மற்றும் வெள்ளாடுகளின் குருதியை குடித்து மகிழ்ந்தனர் .