திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 150க்கும் மேற்பட்ட நரிக்குற இன மக்கள் வசித்து வந்ததாகவும், வேலை மற்றும் வாழ்வாதாரம் தேடி பல பகுதிகளுக்குச் சென்று விட்டதால், இதனைப் பயன்படுத்திக் கொண்ட சில தனிநபர்கள், தங்களது பூர்வீக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, தங்களது பகுதியில் குடியேற விடாமல் தடுக்கின்றனர் எனக் கூறி, 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (பிப்.6) காலை வந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட, தங்களது முன்னோர்கள் வசித்து வந்த பூர்வீக நிலம் தங்களுக்கு வேண்டுமெனவும், நிலத்தை மீட்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தோம் என்றனர்.
இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், ஆட்சியரைப் பார்க்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். ஆனால், அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.