சென்னை:கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை, கடந்த மார்ச் 9ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஜெய்பூரில் வைத்து கைது செய்தனர். மேலும், ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக, ஜாபர் சாதிக்கின் கூட்டாளியாக அறியப்படும் சதா என்கிற சதானந்தம் என்பவர், தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த சதானந்தம், சென்னையில் தங்கி போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பதுங்கி இருந்த சதானந்தத்தை, நேற்று இரவு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த இருவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல் தொழிலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.