கன்னியாகுமரி:நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (33). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் வடலிவிளை பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் சாமி ஆடுவார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வடலிவிளை சுடலை மாடன் சாமி கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
பூஜையின் போது வைக்கப்படும் மதுவை, பூஜை முடிந்தவுடன் படையலில் வைக்கப்பட்ட மதுவைக் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அருள். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் கோயில் பூஜையில் மது படையல் வைக்கப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மதுவை வழக்கம் போல் அருள் எடுத்து சென்று தனது உறவினரும் வைத்தியநாதபுரம் கோயில் பூசாரியுமான செல்வகுமார் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதில் செல்வகுமார் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர், ஆனால் செல்லும் வழியிலேயே செல்வகுமார் உயிரிழந்தார்.
இதே போல் செல்வகுமாருடன் மது அருந்திய அருள் ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையில் இறந்து போன செல்வகுமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஷம் கலந்த மது அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் வடலிவிளை வயல் தெருவைச் சேர்ந்த அஜி என்ற (46) சதீஷ் என்பவர் மதுவில் விஷம் கலந்தது உறுதியானது. இதனை அடுத்து அஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.