சென்னை: தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் இறந்து உள்ளனர்.
இது ஒரு துயரமான சம்பவமாக தமிழ்நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது விரும்பக்கூடாத ஒரு நிகழ்ச்சி. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தான் இதற்கு காரணம் என்று நாங்கள் பார்க்கிறோம். இந்த கள்ளச்சாராயம் இருக்கக்கூடிய இடம் என்பது காவல் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சிக்கும் மையப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு இடம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சாராயம் விற்பனை கொடி கட்டி பறப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உயிரிழந்த குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் வழங்கியதும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியிருப்பதும் ஒரு நல்ல விஷயம். ஆனால், அது மட்டும் போதாது நிரந்தரமாக மனிதனின் வாழ்க்கைக்கு தமிழக அரசு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.