வேலூர்:வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தேசிய கல்வி தொழில்நுட்ப குழுமத் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ர புதே மற்றும் கர்நாடக மாநில வளர்ச்சி கவுன்சில் தலைவர் டி.ஆர்.பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தேசிய கல்வி தொழில்நுட்ப குழுமத் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ர புதே கூறியதாவது, "கணினி அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவுத் திறன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறதாகத் தெரிவித்தார். மாணவர்களுக்கு சரியான அணுகுமுறை இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது என்றும், மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்பதையும் அறிவுறுத்தினார்.
இந்தியா தற்போது மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது என்றும், 2014ஆம் ஆண்டு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட இந்தியாவில் இல்லை என்றும், தற்போது இந்தியாவில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் குறிப்பாக, நேரத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் திறன், பயிற்சி இவை இரண்டையும் கடைபிடித்தால் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வரலாம் எனக் கூறினார்.