தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது! - மைவி3 ஆட்ஸ்

Myv3 Ads: கோவையில் Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த், நேற்று (பிப்.10) இரவோடு இரவாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Myv3 Ads
Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 9:37 AM IST

Updated : Feb 11, 2024, 5:24 PM IST

Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு Myv3 Ads என்ற செயலி செயல்பட்டு வருகிறது. யூடியூப் சமூக வலைத்தளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மீது மோசடி தொடர்பாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், Myv3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சக்தி ஆனந்த் நேற்று (பிப்.10) இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். சக்தி ஆனந்த்னுடன் கைது செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் திருமண மண்டபத்தில் இருந்து இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, Myv3 Ads நிறுவனம் மீது முத்து என்பவர், கடந்த ஜன.29ஆம் தேதி, கோவை சைபர் க்ரைம் பிரிவில் Myv3 Ads நிறுவனமானது மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி, பெரும் தொகையை வசூலித்து வருகின்றது எனவும், இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.

அந்நாளில், Myv3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக 2,000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஜன.30ஆம் தேதி இருகூர் வி.ஏ.ஓ ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களைச் சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், கடந்த ஜன.31ஆம் தேதி பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இவ்வாறு பல தரப்புகளிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட்டது. அந்நாளிலேயே Myv3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த், நிறுவனம் நடத்தி வருவதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது என்றும், எந்த அதிகாரிகளுக்கும் காண்பிக்க நான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீ நிதி போலியாக அளித்த புகாரை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, MyV3 Ads நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் கூறினார். பின்னர், இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த பிப்.5 ஆம் தேதி புகார் மனு அளித்தனர்.

அதில், நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர், சக்தி ஆனந்த்-க்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பினர். அதன்படி, சக்தி ஆனந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.10) MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், என் மீதான குற்றம் நிரூபிக்கும் வரை யாரும் அவதூறு பேசக் கூடாது என்று கூறி சக்தி ஆனந்த் புகார் அளிக்க வந்தார்.

காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை..! அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!

Last Updated : Feb 11, 2024, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details