அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவி கிரமத்தில் உள்ள மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சக்திவேல். அதேபோல, ஆண்டிமடம் அருகே உள்ள திராவிட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகள் பவானி(25). இவர் நர்சிங் படித்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டிற்குத் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து இருவீட்டாரும் இவர்களை ஏற்றுக் கொண்டாதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நீண்ட நாட்களாக இருவரும் குழந்தை இல்லாமல் இருந்ததாகவும், தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், பவானி 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே, அவரை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று சக்திவேல் மற்றும் பவானி தம்பதிக்குத் திருமண நாள் என்பதால், அதைக் கொண்டாடப் பவானியை அவரது தாய் வீட்டிலிருந்து சக்திவேல் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கணவர் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பவானி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.