தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நேரத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியாற்றியது எப்படி சாத்தியம்?- அண்ணா பல்கலை. துணை வேந்தர் விளக்கம்! - Mylswamy Annadurai

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 52 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய 189 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 8:49 AM IST

Updated : Jul 25, 2024, 9:23 AM IST

சென்னை: 'ஆளில்லா விமானம்' குறித்து ஒருநாள் கருத்தரங்கு குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் நடைபெற்றது. இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் சதீஷ் ரெட்டி, உயர் ராணுவ அதிகாரிகள் நேரிலும், இணையம் வழியாகவும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், கல்லூரியின் ஆராய்ச்சி பிரிவு ட்ரோன் தயாரிப்பு பிரிவு இயக்குநர் செந்தில்குமார், ட்ரோன் தயாரிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "உலகளவில் ஆளில்லாத விமானம் பல சேவைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஏர்முனை முதல் போர்முனை வரை ஆளில்லா விமான சேவை பயன்படுத்தப்படுகிறது. போர் முனைகளில் முக்கிய பங்கு வகிப்பதில் ஆளில்லா விமான சேவை செயல்களும் ஒன்று.

தமிழ்நாட்டில் ஆளில்லா விமான சேவைகள் குறித்து பல கட்ட ஆராய்ச்சிகள் நடத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போது அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்கும் ஆளில்லா விமானம் நமது நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் உதவும் வகையில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்த ஆளில்லா விமானங்களின் தர நிர்ணயம் என்ன என்பதை இந்த கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

மேலும், எதிரி நாட்டிற்குச் சென்றாலும் நமது ஆளில்லா விமானம் நமது நாட்டிற்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும். அதற்கான செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆளில்லாத விமானம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இந்த கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளை அண்ணா பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய தொழில்களை நோக்கி செல்லும் வாய்ப்பும் உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், "கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரோன் துறையில் ஏராளமான சாதனைகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் எண்ணற்ற அறிஞர்கள், வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 30 ட்ரோன் நிறுவனங்களும் பங்கேற்று இருக்கிறார்கள்.

ட்ரோன் துறை வரும் காலங்களில் வெவ்வேறு துறைகளில் பயன்படும். அதற்காக நமது இந்திய அரசும் தர சான்றிதழ் கொடுத்து வருகிறது. எந்த ஒரு துறையிலும் தரம் இருந்தால்தான் அந்த துறை நீடித்து இருக்கும். இயக்குநர் ஜெனரல் ஆப் குவாலிட்டி அஷுரன்ஸ் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் எக்கசகமான துறைகள் பயன்பெறும்" என்றார்.

பின்னர், அறப்போர் இயக்கத்தின் போராட்டம் குறித்த செய்தியாளர் கேள்விக்கு, "அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 52 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என கணக்கிடுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதுதான். இதில் முறைகேடுகளும் இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது, ஒவ்வொரு ஆசிரியரின் ஆதார் எண்ணை வைத்து இதனை சரி பார்ப்போம். அந்த வகையில் ஆசிரியர்களின் ஆதார் எண் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சில ஆசிரியர்கள் ஆதார் எண்ணை மாற்றி பதிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் வெவ்வேறு ஆதார் எண்ணுடன் இவர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது. இதில், 189 ஆசிரியர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் பணியாற்றியுள்ளனர். இந்த 189 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இது போன்ற ஆசிரியர்கள் பணியமர்த்திய கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த முறைகேட்டில் 189 ஆசிரியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். 52 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 2,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த 2 ஆயிரம் ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக 189 ஆசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆதார் கார்டு எண்ணை தவறாகப் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகளில் 470 போலி பேராசிரியர்கள்.. என்னதான் தீர்வு? அண்ணா பல்கலை துணைவேந்தர் பிரத்யேக பதில்!

Last Updated : Jul 25, 2024, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details