திருவாரூர்:முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
அலையாத்திக் காடுகள்: தமிழ்நாட்டில் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் அமையப்பெற்ற இடம் முத்துப்பேட்டை. அலையாத்தி தாவரம் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும், உவர் நீரில் வளரக்கூடியது. பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளன. தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கால நிலை மாற்றத்தினை சீர் செய்வதில் அலையாத்திக் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், அவ்வப்போது ஏற்படும் சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கி, இயற்கை அரணாக விளங்கி வருவதால் பெரிதாக பாதிப்படைகின்றன. எனவே, வனத்துறை மூலம் முத்துப்பேட்டை வனப்பகுதியில் அலையாத்திக் காடுகளை உருவாக்குவதற்கும், புனரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
முத்துப்பேட்டையில் உள்ள ஈரநில சூழல் அமைப்பு மொத்தம் 12 ஆயிரத்து 20 ஹெக்டர் பரப்பளவில் உள்ளது. இந்த நிலப்பரப்பில் தகுதியான இடங்களில் வனத்துறை மூலம் மீன்முள் வடிவத்தில் மெயின் மற்றும் கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, வாய்க்கால்களின் ஓரத்தில் அலையாத்திச் செடிகள் நடவு செய்யப்பட்டு இந்த அலையாத்திக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால்களின் ஒரு பகுதியில் உவர் நீரும் மற்றொரு பகுதியிலிருந்து ஆற்று நீரும் கலக்கப்பட்டு, கடல்நீரின் உவர் தன்மையினை குறைத்து அலயாத்திக்காடுகள் உருவாக வகைசெய்யப்படுகிறது. கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24 ஆகிய ஆண்டுகளில் சுமார் 1700 ஹெக் பரப்பளவில் TBGPCCR NABARD மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ், அலையாத்திக் காடுகள் தோட்டங்கள் எழுப்பப்பட்டும் புனரமைக்கப்பட்டும் உள்ளன.