முத்தரசன் பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu) ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் தொடங்க காரணமாக இருந்த தலைவர்களில் ஒருவரான சி.எஸ்.சுப்ரமணியம் பெயரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரங்கம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதனைப் பார்வையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது என்பது உறுதி. அண்ணாமலை போன்றவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விகளை மூடி மறைப்பதற்கு வேறு வேறு காரணங்களைக் கூறி, தனது கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுவிட்டது எனக் கூறி வருகிறார்கள்.
பிரதமர் மோடி எந்த சாதனையும் செய்யவில்லை. எதையும் நிறைவேற்றவில்லை. அதை மூடி மறைப்பதற்கு வேறு மாதிரியான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இது மிக அபாயகரமான பரப்புரை, மத ரீதியாக பிளவுபடுத்தும் பரப்புரை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தாலியைப் பறித்துக் கொள்வார்கள், நிலங்களைப் பறித்து கொள்வார்கள் என்ற ஒரு அபத்தமான கேவலமான பரப்புரையை மோடி மேற்கொண்டு வருகிறார்.
மோடி வகிக்கின்ற பொறுப்பிற்கு அவர் செய்கிற பரப்புரை ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் பொறுப்பான அமைச்சர் பதவியில் இருப்பவர், சிறிது கூட பொறுப்புணர்ந்து பேசாமல் பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது என்பது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது. இது நாட்டிற்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு அச்சமற்ற வாழ்க்கை வாழ முடியாத நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியினுடைய தலைவர்கள், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம், பாகிஸ்தானுக்குப் போகலாம் என்கிற முறையில் ஏற்கனவே பேசி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் பேசுவதை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமருடைய பரப்புரை அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, பொதுமக்களே சுமார் 20,000 பேர் கண்டித்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் தொடர்ந்து மௌனம் காப்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது.
தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் தவறாகப் பேசினார் என்ற காரணத்திற்காக 48 மணி நேரம் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை செய்திருக்கிறது. அதேபோல், மோடியின் பிரச்சாரத்தை தடை செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யாமல், மோடிக்கு ஆதரவாக செயல்படுவது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. பிரச்சாரம் செய்யாமல் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிராமத்தில் குவாரி வெடி விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளது குறித்து அரசு விரிவான விசாரணை செய்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை வழக்கு.. முக்கிய நபரின் திடுக்கிடும் வாக்குமூலம்! - Admk Ex Councilor Son Murder Case