திண்டுக்கல்:அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்று (ஆக.24) காலை 8.30 மணியளவில் துவங்கியது. அருள்மிகு பழனி ஆண்கள் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணியளவில், சென்னையில் இருந்து காணொளி வாயிலாகத் துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டிற்காக கால்கோள் ஊன்றும் விழா கடந்த 3 ஆம் தேதி துவங்கி பணிகள் நடைபெற்று வந்தன. அதற்காக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள கம்பத்தில் மாநாட்டு கொடி ஏற்றப்பட்டது.
மொத்தமாக இங்கு 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திரையரங்கு மற்றும் நூலகத்தை அமைச்சர் சேகர்பாபு, ஐ. பெரியசாமி, அரா சக்கரபாணி ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தனர். அதனைத் தொடந்து மாநாடு நடைபெறும் அருணகிரிநாதர் அரங்கில் ஆதீனங்கள், அமைச்சர்கள் சிறப்பு உரை ஆற்றினர். மேலும் மாநாட்டு மலரும் வெளியிடப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆதீனங்களின் சிறப்புரை, முருகனைப் பற்றிய பாடல்கள், நடனம், நாடகம், மங்கல இசை என தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் 5 அரங்குகளில் ஆய்வு கட்டுரைகள் மீது விவாதமும் நடைபெறவுள்ளது. அதற்காக 1,300 கட்டுரைகள் பலரால் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், குருமகா சந்நிதானம், சிரவை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டின் விழா மலர் மற்றும் ஆய்வு கட்டுரை மலர் என இரண்டு மலர்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3-டி வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையிலும், 100 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.