திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ள முத்தழகுப்பட்டி என்ற அழகிய கிராமம். இக்கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாட்கள் ஆலயப் பெருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆலயத்தின் திருவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கறிவிருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கடைசி நாளான நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
அதற்காக ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, புனித செபஸ்தியாருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஆடுகள், கோழிகளை தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதில் மொத்தமாக 800 ஆடுகளும், 2 ஆயிரம் கோழிகளும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெங்காயம், தக்காளி, அரிசி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், மிளகாய்ப் பொடி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கினர். அப்படி காணிக்கையாக வந்த பொருட்களை வைத்து அன்னதானம் செய்ய, அப்பகுதியில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் என பாகுபாடின்றி அனைவரும் சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக குழந்தை பள்ளிக்கு கூட செல்லாமல் விடுமுறை எடுத்து, அன்னதானம் சமைக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
கொட்டும் மழையிலும் அன்னதானம்:பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை வெட்டி இளைஞர்கள் சமைக்க, அதற்கு தேவையான வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை பெண்கள் நறுக்க என அன்னதானத்திற்காக ஒரு ஊரே அயராது உழைத்தது. பொதுமக்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட அரிசி சாதம் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு விருந்து கமகமவென தயாரானது.