தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆண்டாள் அர்த்த மண்டபத்தில் இளையராஜா? - கோயில் நிர்வாகத்தின் விளக்கமும், இசைஞானி பதிவும்! - ILAIYARAJA TEMPLE ISSUE

ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜாவை ஜீயர்கள் பாரபட்சமாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து கோயில் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டாள் கோயில் நிகழ்ச்சியில் ஜீயர்களுடன் இசையமைப்பாளர் இளையராஜா
ஆண்டாள் கோயில் நிகழ்ச்சியில் ஜீயர்களுடன் இசையமைப்பாளர் இளையராஜா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 12:34 PM IST

விருதுநகர்:மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று (15.12.2024) சென்றிருந்தார். இவருடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஜீயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோரும் கோயிலுக்குச் சென்றனர்.

இந்த விருந்தினர்களுக்கு வெண்குடையுடன் மேள தாளங்கள் முழங்க வரவேற்பும், பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. ஆண்டாள் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்கள் முன்னே செல்ல, இளையராஜா அவர்களை தொடர்ந்து சென்றார்.

ஆண்டாள் கோயிலில், இளையராஜாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்ட புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியில் இளையராஜா தடுத்து நிறுத்தப்படுவதும், சில வார்த்தைப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், அர்த்த மண்டப படியை தாண்டிச் சென்ற இளையராஜா மீண்டும் பின்நோக்கி வந்து வாசலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்வதும் பதிவாகியுள்ளது.

கோயில் நிர்வாகம் விளக்கம்

ஆண்டாள் கோயிலில் கருவறையில் மூலவர் சிலை அமைந்திருக்கும். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் இருக்கும். இதற்கு அடுத்த மண்டபத்திலிருந்தே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜீயர்கள் அர்த்த மண்டபத்தில் நுழைந்த நிலையில், அவர்களுடன் சென்ற இளையராஜாவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆண்டாள் கோயிலில் இளையராஜா (ETV Bharat Tamil Nadu)

இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா பாசுரம் பாடிய ஆண்டாள் கோயிலில் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஆண்டாள் கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரான சர்க்கரை அம்மாள், கோயிலில் இந்த நடைமுறை வழக்கமான ஒன்று தான் என கூறினார்.

கோயில் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் நிரந்தரமாக உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்ற அவர், ஜீயர்களுடன் வந்த இளையராஜா தெரியாமல் அர்த்த மண்டபத்திற்குள் வந்தபோது பட்டர்கள் அனுமதி இல்லை என்பதை தெளிவு படுத்தியதாக விளக்கம் அளித்தார். இதனையடுத்து இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார் எனவும் செயல் அலுவலர் கூறினார்.

இளையராஜா எக்ஸ் பதிவு:

இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் பரவிவரும் நிலையில், ஆண்டாள் கோயில் விவகாரம் தொடர்பாக, இளையராஜா தனது கருத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்புக் கேட்க வேண்டும்

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பேசு பொருளானது. இளையராஜாவுக்கு துணை நிற்க வேண்டும்; அவருக்கான உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும்; திமுக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இசை இறைவன், ஆண்டாளின் மகன் ஐயா இளையராஜா அவர்களை அவமதித்த திருவில்லிபுத்தூர் ஜீயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆண்டாள் கோயில் நிகழ்ச்சி

தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் இடம்பெற்றிருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் ராஜகோபுரமேயாகும். இந்த கோயிலின் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக இளையராஜா கோயிலுக்கு சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியே நின்று தரிசனம் செய்த இளையராஜாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details