தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திரைப்பட பாடல்களுக்கு இளையராஜாவை போல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை கேட்பதில்லை - நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்! - Ilayaraja music copywrite issue

திரைப்படத்திற்கான இசைக்கு தனியாக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போடாத நிலையில், அதற்காக இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை கேட்க முடியாது என இசை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றம்
இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை உயர்நீதிமன்றம் (Image Credits : ETV Bharat tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 6:46 PM IST

Updated : Jun 13, 2024, 7:18 PM IST

சென்னை:திரைப்படத்திற்கான இசைக்கு தனியாக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போடாத நிலையில், அதற்காக இசையமைப்பாளர் இளையராஜா காப்புரிமை கேட்க முடியாது என இசை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த், 'தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட சிறப்புரிமை இருக்கிறது' என கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால், இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என்ற தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று (ஜூன் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 'ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பதற்காக இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும்.

படம் ஒப்பந்தம் செய்யும்போது தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்படுகிறது. படம் முடிந்ததும் அனைத்து காப்புரிமைகளும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சென்றுவிடும். இதில் இளையராஜா மீண்டும் உரிமை கோர முடியாது.

எகோ நிறுவனம் பாடல்களை வாங்கி விற்கும் நிறுவனம் மட்டுமே. அது இளையராஜாவின் காப்புரிமையை கேட்க வில்லை. 2012 காப்புரிமை சட்டத்தில் (ஒப்பந்தத்தை மீறி) இசையமைப்பாளர் தனது சுயசிந்தனையில் உருவான இசைக்கு காப்புரிமை பெற அனுமதி வழங்குகிறது.

காப்புரிமை பெற தனிப்பட்ட முறையில் இளையராஜா ஆல்பமும், கச்சேரியும் வெளியிடவில்லை. திரைப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது தயாரிப்பாளருக்கு சென்றுவிடுவதால் அதற்கு இளையராஜா காப்புரிமை கேட்க முடியாது.

இளையராஜா தனது இசையால் தான் திரைப்படங்கள் வெற்றி பெறுகின்றன என நினைக்கிறார். அவரும் படத்திற்காக இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் என்பதை மறந்து தனியாக காப்புரிமை கேட்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை கேட்காத நிலையில், இளையராஜா மட்டும் காப்புரிமை கேட்பது சட்டவிரோதமானது' என இசை நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இளையராஜா தரப்பு விளக்கத்திற்காக வழக்கின் விசாரணையை ஜூன் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:"ஒரு படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கேச் சொந்தம்" - சாமானியன் தயாரிப்பாளர் பேட்டி!

Last Updated : Jun 13, 2024, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details