சென்னை: தாம்பரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராஜி விளக்கம் அளித்தார். இந்நிலையில், இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 நாள் அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்:நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி வழக்கு விசாரணைக்கு நேற்று நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவரின் உறவினரான முருகன் உட்பட அவர் நிறுவனத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோரையும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகிய இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் மாலை நேரத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்தார்.