தேனி: இடுக்கியில் சண்டையிட்டுக் கொண்ட இரு காட்டு யானைகளில் படுகாயமடைந்த முறிவாளன் கொம்பன் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மூணாறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் முறிவாளன் கொம்பன் காட்டு யானையும், சக்கக்கொம்பன் காட்டு யானையும் நேற்று இரவு மாறி மாறி ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளது. இதில் முறிவாளன் கொம்பன் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை, இன்று காலை உடல் நிலை மோசமடைந்து கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கும், கால்நடை துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், முறிவாளன் யானைக்கு முதுகுத்தண்டு அருகில் ஏற்பட்ட ஆழமான காயத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.