திருச்சி எம்பி சிவா பேட்டி தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த தனியார் கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இவ்விழாவில் மாநிலங்களவை குழுத் தலைவரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், "மனித இனத்திற்கு மட்டும்தான் பேசத் தெரியும். இப்படி பேசத் தெரிந்தவர்கள் உருவாக்கிய மொழிகள் கோடிக்கணக்கில் உலகத்தில் இருந்திருக்கின்றன. லட்சக்கணக்கில் அழிந்து போயிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் தான் இன்னமும் இருக்கின்றன. அப்படி ஆயிரக்கணக்கில் இருப்பவற்றில், காலங்களைக் கடந்து நின்று, வென்று இன்னமும் தொடரும் என்ற நிலையில் இருக்கக்கூடிய மிக சில மொழிகளில் மூத்த மொழி நம்முடைய தாய்மொழி, தமிழ்மொழி.
காலத்தில் எத்தனையோ சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன, படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. நாட்டை குறி வைத்து படையெடுப்பு, பண்பாட்டை பாழாக்க படையெடுப்பு, கலாச்சாரத்தைச் சீரழிக்க படையெடுப்பு, மொழியை சிதைக்க, ஆதிக்கம் செலுத்துவதற்கு படையெடுப்பு, இதையெல்லாம் மீறி நின்ற மொழி நம்முடைய தமிழ் மட்டும்தான்.
நம்முடைய இனத்தை இழந்திருக்கிறோம், நம்முடைய ஆட்சியை இழந்திருக்கிறோம், பலவற்றை தொலைத்திருக்கிறோம். ஆனால், தமிழன் இழக்காத ஒன்றே ஒன்று மொழி மட்டும்தான் என்கிற போது, அதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நீங்கள்தான் நாளைய நாடு, நீங்கள்தான் வருங்காலம், நீங்கள்தான் நாடு எப்படிப் போகப்போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகிறவர்கள். நான் மூத்த தலைமுறையாகி விட்டேன், வழி காட்டுகின்ற இடத்திற்கு நாங்கள் வந்து விட்டோம். நீங்கள்தான் இனி அடுத்த தலைமுறை என்கிற போது, உங்களை நோக்கி எங்களது நம்பிக்கை அதிகமாக வளர்கிறது. மொழியைக் காப்பாற்றுங்கள்.
மேலும், உங்களைத் தவிர்க்க முடியாத மனிதராக மாற்றுங்கள், எத்தனை பேர் சென்றாலும் உங்கள் தடம் தனியாக இருக்க வேண்டும். உங்கள் அடையாளம் தனியாக இருக்க வேண்டும். முதலமைச்சர் தனக்குரிய அதிகாரத்தோடு சொல்லி இருக்கிறார். அண்ணாமலை அவருக்குரிய இடத்தின் தன்மையோடு பேசி இருக்கிறார். அரசியல் சட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. மாநில அரசிற்கு அதிகாரங்கள் உள்ளன.
பெரும்பாலானவற்றை நடைமுறைப்படுத்துகிற அதிகாரங்கள் மாநில அரசுக்குத்தான் வந்து சேரும். எனவே, சட்டம் இயற்றலாமே தவிர, எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அண்ணா இருமொழித் திட்டத்தை சட்டமன்றத்தில் இயற்றும் போது, நாடாளுமன்றம் இயற்றிய மொழி தொடர்பான தீர்மானத்தை சட்டமன்றம் நிராகரிக்கிறது எனக் கூறிதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.
இந்தியா கூட்டணி: தமிழ்நாட்டில் திமுக முழுமையாக வெற்றி பெறும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, பாஜக கொண்டு வந்த பல பாதகமான சட்டங்களை மறுபடியும் திருத்தி, இந்தியாவை ஜனநாயக பாதைக்குக் கொண்டு செல்வதற்கான முழு முயற்சிக்கான ஈடுபாட்டோடு கூட்டணி அரசு செயல்படும்” என பேசினார்.
இதையும் படிங்க:“எனக்கு பேச சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கருணாநிதி” - குஷ்பூவின் முழு விளக்கம் என்ன?