திருவள்ளூர் : திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக அரசு சாதாரண அரசியல் கட்டமைப்பு மட்டுமல்ல. ஜனநாயகத்தை எல்லா விதத்திலும் தாக்கக்கூடிய ஒரு பாசிச கட்டமைப்பு கொண்ட அரசாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டத்தொடரில் தன்னுடைய ஆட்சிக்காலம் முடியும் காலத்துக்குள் சிவில் சர்வீஸ் (UPSC) தேர்வுகளை ரத்து செய்வதே எனது கொள்கை என பகிரங்கமாக தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வு என்பது பல கட்டங்களை தாண்டி, நேர்மையான, உண்மையான மனிதாபிமானம் உள்ளவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்பு பொறுப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த நிலைமாறி 'லேட்ரல் என்ட்ரி' என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இந்த லேட்ரல் என்ட்ரி மூலம் இணைச் செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான லேட்ரல் என்ட்ரி அப்ளிகேஷனை யுபிஎஸ்சி கோரியுள்ளது.
கடந்த வருடம் இந்த லேட்ரல் என்ட்ரியில் யார் யார் வந்தார்கள் என பார்த்தால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என எல்லாருக்கும் இந்த வாய்ப்புகளை கொடுத்து இந்தியாவை முழுமையாக அவர்கள் கன்ட்ரோலில் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.