தஞ்சாவூர்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (பிப்.3) தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில், எம்பி பழனிமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தஞ்சை கீழவாசல் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாவின் சிலைக்கு எம்எல்ஏ நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஊர்வலமாக வந்து, மாலை அணிவித்து ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில் எம்பி பழனிமாணிக்கம் பேசுகையில், “நிலத்தால், மொழியால், கலாச்சாரத்தால் சிறந்து நின்ற தமிழினம் வீழ்வதைக் கண்டு, இனத்தின் பெருமையையும், கலாச்சாரத்தின் உயர்வையும், மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டு இளைஞர்களிடையே எடுத்துக் காட்டி, குறுகிய காலத்தில் இந்தியாவில் மாற்று அரசாங்கத்தை உருவாக்கியவர். இரு மொழிக் கொள்கை மற்றும் சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்கி, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியர் அண்ணா” என புகழாரம் சூட்டினார்.