சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி நாடு முழுவதும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில், மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், "இரண்டாவது முதலமைச்சரை பாஜக அரசு தனது கைப்பாவையான அமலாக்கத்துறை மூலம் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக இந்தியாவின் தலைநகரம், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தேர்தலுக்கு முன்பாக கைது செய்திருப்பது முழுக்க முழுக்க பலி வாங்கும் செயலாகவும், எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலாகத் தான் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சிகளின் கணக்குகளை எல்லாம் முடக்கி, வங்கிக் கணக்கைச் செயல்படுத்த முடியாத அளவிற்குச் செய்துள்ளனர். தற்போது பாஜகவின் நோக்கம் என்னவென்றால், தேர்தலின் போது எதிர்க்கட்சி தலைவர்கள் செயலிழந்து இருக்க வேண்டும் என்பதுதான். அமலாக்கத்துறை சோதனை கைது தேவையே கிடையாது. ஏனென்றால் பணப்பரிமாற்றம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆவண ஆதாரம் வேண்டும்.
தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஒருவரைக் கைது செய்து, தற்போது வரை ஜாமீனில் விடாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதித்துறைதான் இந்த அடங்காப்பிடாரியான அமலாக்கத்துறையைக் கட்டுப்படுத்த வேண்டும். யூதர்களை சட்டப்படிதான் நாசிச ஜெர்மனி கொலை செய்தார்கள், இயேசுவைச் சிலுவையில் சாத்தியது கூட அன்றை ரோமானியர் சட்டப்படிதான், ஆகையால் சட்டப்படி நடக்கிறது என்பதற்காக அது தர்மப்படி நடக்கிறது என்ற அர்த்தம் கிடையாது. அமலாக்கத்துறை வழக்குகளுக்கு எல்லாம் கைது தேவையே கிடையாது.
மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆண்டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். அதற்கான டிரையல் இன்னும் துவங்கக்கூடவில்லை. இதெல்லாம் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகத் தான் நடக்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுடன் எந்த சோதனையும் நடப்பதில்லை. அதேபோல பல வழக்கு இருந்தால் அனைத்தையும் மூடி மறைத்து விடுகின்றனர்.