தூத்துக்குடி:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் பெய்த தொடர் கனமழையால் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட எப்.சி.ஐ குடோன் பகுதி, P&T காலனி, ராஜீவ் நகர், சூசை பாண்டியாபுரம், தெரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரைப் பார்வையிட்டு, வெள்ளநீரை வெளியேற்றும் பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களுடன் உரையாடி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இந்திய உணவு கழகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் பொருட்களை பாதுகாத்து வைக்கக்கூடிய பகுதிகளை ஆய்வு செய்து, உணவுப்பொருட்கள் எதுவும் மழைநீரில் பாதிப்படையாத வண்ணம் இருக்கிறதா? என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
எம்பி கனிமொழி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) அலைபேசியில் நிலவரம் கேட்டறிந்த முதல்வர்:பின்பு, உணவுக் கழகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த அதிகாரியிடம் கூறினார். எப்.சி.ஐ குடோன் பகுதியில் ஆய்வின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகக் கனிமொழி கருணாநிதியைத் தொடர்பு கொண்டு உரையாற்றினார். அதில், “பல இடங்களில் மழை வெள்ளத்தைப் பார்வையிட்டு உள்ளேன். தற்போது இங்கு மழை பெய்யவில்லை வெயில் அடிக்கிறது. தூத்துக்குடி முடித்துவிட்டு, ஏரல் சென்று அங்கு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளேன்” என்று முதல்வரிடம் கனிமொழி கூறினார்.
இதையும் படிங்க:ஏரியாக மாறிய விவசாய நிலம்! விளையும் பயிர் வெள்ளத்தில் மூழ்கிய சோகம் - MAYILADUTHURAI FARM LAND DESTROYED
இதனைத் தொடர்ந்து, எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரக்கூடிய அபாயம் இருந்ததால் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம். ஏறத்தாழ 33 பாதுகாக்கப்பட்ட இடங்களில் 1,580 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு போன்ற அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சர் அதிகாரிகளிடம் மற்றும் அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக மழை நிலவரம், பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கொண்டிருக்கிறார்.
தற்போது, மருதூரில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குறைந்து 20 ஆயிரம் கனஅடியாக இருக்கிறது. அதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியே செல்லும் தண்ணீர் 30,000 கனஅடியாக குறைந்து இருக்கிறது. கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் அதிகமாக வெளியற்றப்பட்ட நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நீர் அளவு குறைக்கப்பட்டது. இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்படுள்ளது” என கூறினார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.