திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கப் பணிகள் மற்றும் பயணிகள் வசதி குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியருடன் எம்பி துரை வைகோ இன்று (ஆக.19) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி, "இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர், விமான நிலைய இயக்குனர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், திருச்சி விமான நிலைய ஓடுதளப் பாதை விரிவாக்கம் குறித்தும், பயணிகளுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் பேசப்பட்டது.
திருச்சியில் புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு ஜூன் 11ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால், பெரிய விமானங்கள் தரையிரங்கும் அளவிற்கு ஓடுதளப் பாதை இன்னும் விரிவுப்படுத்தப்படவில்லை. ஓடுதளப் பாதையை விரிவுப்படுத்தினால் தான் கூடுதல் விமானங்கள் மற்றும் பெரிய விமானங்கள் இயக்கப்பட முடியும். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஓடுதளப் பாதைக்கான நிலத்தை கையகப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
விமான நிலையங்களுக்கு பயணிகளோடு வருகை தருபவர்களின் பயன்பாட்டிற்காக தற்போது ஒரே இடத்தில் தான் கழிப்பறை வசதி உள்ளது. எனவே, வருகை (arrival) மற்றும் புறப்பாடு (departure) ஆகிய இரண்டு பகுதிகளிலும் பயணிகளோடு வருபவர்களின் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கேட்டுக் கொண்டேன்.
பொதுவாக விமான நிலையங்களில் பாதுகாப்பு கருதி ஆட்டோக்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. ஆனால், ஆட்டோவில் வருபவர்கள் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருந்து விமான நிலைய முனையத்திற்குச் செல்ல ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.