கோயம்புத்தூர்:கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் (Myv3Ads) மைவி3ஏட்ஸ் நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை தினசரி வருமானம் பெறலாம் என இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்திக்கேற்ப ஆயுர்வேதிக் மருந்துகள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாக கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனை நம்பி பல லட்சம் பேர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அண்மையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், தினசரி விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் மைவி3 நிறுவனம் மீது, கோவை மாநகர காவல்துறையில் பாமகவை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 29-ஆம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், திட்டமிட்டு பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டனர். இந்த நிலையில் மைவி3 நிறுவனம், 'வி3 ஆன்லைன் டிவி' என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று(பிப்.5) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஸ்டாலின் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 'வி3 ஆன்லைன் டிவி' என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து துவங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது.