சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பானது (ஜாக்டோ- ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தொடர்ந்து பிப்ரவரி 25ந் தேதியான இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.
இதையடுத்து, அரசு அலுவலக சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தவிட்டிருந்தார். அந்த குழுவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து, அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேற்று (பிப்.24) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜாக்டோ ஜியோ போராட்டம்
இதில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு அரசு தரப்பில் 4 வார கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனாலும், அரசு ஊழியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த திட்டமிட்டபடி இன்று (பிப்.25) போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், மதிப்பூதியத்தில் பணி செய்வோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க:'2020ஆம் ஆண்டு'; தற்காலிக பணியாளர்களை உடனே நீக்குங்க - தமிழ்நாடு அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு!
அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் 1,49,401 ஆசிரியர்களில் 1,09,091 ஆசிரியர்கள் இன்று பணிக்கு வந்துள்ளனர். 19,975 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர். 20,335 ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அது போல ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 575 பேர் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஜாக்டோ ஜியோ போராட்டம் (ETV Bharat Tamil Nadu) 2,779 பள்ளிகள் மூடல்'
மேலும், தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு இன்று போராட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனால் பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லும் நிலைமை ஏற்பட்டது.
தலைமைச் செயலாளரின் உத்தரவின் படி பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் குறித்த விபரம் தொடக்கக் கல்வித்துறையில் கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 36,305 பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் இல்லாததன் காரணமாக 2,779 பள்ளிகள் செயல்படவில்லை. 51 பள்ளிகளில் மாற்று ஏற்பாடாக தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் செயல்பட்டுள்ளன.
48,000 ஆசிரியர்கள் லீவ்
தொடக்க கல்வித்துறையின் கீழ் 1,21,239 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் இன்று 53,166 ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை என்ற தகவலும், அதில் 5,136 ஆசிரியர்கள் வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுத்து இருப்பதாகவும், சுமார் 48,000 ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகளுக்குச் செல்லாமல் தற்காலிக விடுப்பு எடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும், பள்ளிக் கல்வித் துறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடச் செய்முறைத்தேர்வு நடைபெறும் நிலையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வினை மறுநாள் நடத்தவும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.