கோலாகலமாக நடைபெற்ற பழனி பங்குனி தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில், பங்குனி உத்திரத்திருவிழா கடந்த மார்ச் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி - வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில், பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தேரோட்டத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானையை பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
இந்த தேரோட்டத்தில் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழுவினர், கோட்டாட்சியர் சரவணன், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, வரும் மார்ச் 27ஆம் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சியுடன், பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.
இதையும் படிங்க: கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு! - Therottam At Kumbakonam