சென்னை: திருவான்மியூர் வால்மீகி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பக்கத்து தெருவில் உள்ள அவரது நண்பர் ஜெயக்குமார் என்பவரைச் சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, ஜெயக்குமார் நண்பர்களான திருவள்ளூர் வேப்பம்பட்டைச் சேர்ந்த விமல் ராஜ் மற்றும் செல்லதுரை ஆகியோர் உடன் இருந்த நிலையில், ஜெயக்குமார் உடன் பேசிக் கொண்டிருந்த மணிகண்டனை விமல்ராஜ் முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
உடனே விமல் ராஜை அழைத்த மணிகண்டன், "என்ன நீ முறைத்துப் பார்க்கிறாய், நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா, இது எங்க ஏரியா பார்த்து இருந்துக்கோ" எனக் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், ஜெயக்குமார், விமல் ராஜ் மற்றும் செல்லதுரை ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, விமல்ராஜ் "உங்க ஏரியவுக்கு வந்ததால் என்னை மணிகண்டன் மிரட்டுகிறான். நீ என்னை தடுத்து விடுகிறாய். எனக்கு இது தான் நீ கொடுக்கும் மரியாதையா?" என கேட்டுவிட்டு வேப்பம்பட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், ஜெயக்குமார் தனது வேறு சில நண்பர்களை அழைத்துச் சென்று, மணிகண்டனை அவரது வீட்டில் நுழைந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.